திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகேயுள்ள வி.கள்ளிப்பாளையம் ஊராட்சியில் ஆயிரம் பெண்களுக்கு கே.எஸ்.கே.பவுன்டேசன் சார்பில் இலவச நாப்கின்கள் வழங்கப்பட்டது.
இது பற்றி பொங்கலூர் ஒன்றியம் வி.கள்ளிப்பாளையம் ஊராட்சி மன்றத் தலைவர் சாந்தினி சம்பத்குமார் கூறியது. எங்களது ஊராட்சியில் 8 ஆயிரம் பேர் வசிக்கின்றனர். அதில் 3500 பேர் பெண்களாவர். இப்பகுதியை சேர்ந்த பெண்கள் விவசாயம், பின்னலாடை,விசைத்தறி போன்ற வேலைக்கு சென்று வருகின்றனர். பொருளாதார ரீதியாக நலிவடைந்துள்ளனர்.
அவர்களின் வாழ்வாதாரம் மேம்பாடு அடைய தற்போது உள்ள 5 குழுக்களை 20 குழுக்களாக உயர்த்தவும், அதே போல் ஆண்கள் சுய உதவி குழு துவங்கி அவர்களும் தொழில் துறையில் வளர்ச்சி அடைய திட்டமிட்டுள்ளேன்.
மாதம் தோறும் பெண்கள் மாதவிடாய் காலத்தில் அதிக விலை கொடுத்து நாப்கின் வாங்கி பயன் படுத்தி வருகின்றனர். சில பெண்கள் அதனை கூட வாங்க பணம் இல்லாமல் பழைய துணியை பயன்படுத்தி வருவதை அறிந்து அவர்களது கஷ்டத்தை போக்க வேண்டும் என்பதற்காக மத்திய அரசின் அங்கீகாரம் பெற்ற மலிவு விலை தரமான நாப்கின்களை கே.எஸ்.கே.பவுண்டேசன் உதவியுடன் மொத்த கொள்முதல் செய்து அறிமுக சலுகையாக அதன் பயன்பாடு அறியும் வகையில் ஆயிரம் பெண்களுக்கு இலவசமாக வழங்கப்பட்டுள்ளது.
அடுத்த கட்டமாக அனைத்து மளிகை கடைகளிலும் 8 பேடுகள் கொண்ட நாப்கின் ரூ.20க்கு விற்பனைக்கு கிடைக்கும் வகையில் ஏற்பாடு செய்யவுள்ளோம். கே.எஸ்.கே. பவுண்டேசன் சார்பில் மாற்றுத்திறனாளிகள் மற்றும் தூய்மை பணியாளர்களுக்கு இலவசமாக வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
வி.கள்ளிபாளையம் அரசு மேல்நிலைப்பள்ளி, வலையபாளையம் அரசு உயர்நிலைப்பள்ளி, துத்தாரிபாளையம் அரசு நடுநிலைப்பள்ளியில் படிக்கும் மாணவிகளுக்கு மலிவு விலை நாப்கின் கிடைக்க வசதி செய்யப்படும். பள்ளியில் படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு நல்ல பண்புகள் வளர மன நல மருத்துவ நிபுணர்களை கொண்டு கலந்தாய்வு நடத்தப்படும் என்றார். உடன் கே.எஸ்.கே.பவுண்டேசன் நிறுவனர் சம்பத்குமார், மகளிர் மேம்பாடு கள அலுவலர் பிரபாவதி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.