50 முறை சலவை செய்து பயன்படுத்தும் முக கவசத்தை திருப்பூரைச் சேர்ந்த பின்னலாடை நிறுவனம் குறைந்த விலைக்கு அறிமுகம் செய்துள்ளது.
கொரோனா வைரஸிலிருந்து அனைவரும் தங்களைத் தற்காத்துக் கொள்ளும் விதமாக மாஸ்க் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ள நிலையில் திருப்பூரைச் சேர்ந்த ப்ளூ ஸ்டிரைப்ஸ் என்ற தனியார் பின்னலாடை நிறுவனம் வைரஸ் மற்றும் பாக்டீரியாக்களை அழிக்கும் திறன் வாய்ந்த முக கவசங்களை ஏற்றுமதி தரத்தில் உருவாக்கியுள்ளனர்.
இந்த வகையிலான முக கவசங்களை இந்திய வர்த்தக சந்தையிலும் மிகக் குறைந்த விலையில் சந்தைப்படுத்த இந்த நிறுவனம் முடிவு செய்துள்ளது. இதன்படி 30 ரூபாய் முதல் முககவசங்களை அறிமுகம் செய்துள்ளனர்.
வைரஸ் மற்றும் பாக்டீரியாக்கள் தயாரிப்பு நிலையிலேயே சுத்திகரிப்பு செய்வதற்காக அல்ட்ரா வயலட் எனப்படும் தொழில்நுட்பத்தில் இயங்கும் அதிநவீன விளக்கை தங்களது நிறுவனத்தில் பொருத்தி புற ஊதாக் கதிர்கள் மூலமாக நுண்கிருமிகள் அற்ற முக கவசங்களையும் தயாரித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.